ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் வென்று சாதனை படைத்த இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள கண்டீவாரா ஸ்டேடியத்தில் மே 24ம் தேதி துவங்கி நடைபெற உள்ளது.
இந்த ஈட்டி எறிதல் போட்டியில் 2 முறை உலக சாம்பியன் கிரனடாவை சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ், 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற ஜெர்மனியை சேர்ந்த தாமஸ் ரோஹ்லர், 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற கென்யாவை சேர்ந்த ஜூலியஸ் யெகோ, அமெரிக்காவின் கர்டிஸ் தாம்சன் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும் இந்த தொடரில் பங்கேற்க 2024-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுக்கு நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்திருந்தார். காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தானியர்களை வெளியேற சொல்லி இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பெங்களூரில் நடக்கும் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு, இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் இறந்தவர்களுக்கு நீரஜ் சோப்ரா அஞ்சலி செலுத்திய பதிவில் பலர், இதுகுறித்து விமர்சித்து பதிவிட்டு இருந்தனர்.
இதையும் படிங்க: இனி தண்ணீ தர மாட்டோம்..! சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு.. பாகிஸ்தானுக்கு இந்தியா அதிகாரப்பூர்வ கடிதம்..!

இதுகுறித்து நீரஜ் சோப்ரா வேதனையுடன் விளக்கம் அளித்துள்ளார்.அர்ஷத் நதீமை நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி தொடருக்காக அழைத்ததை தொடர்ந்து கடும் வெறுப்பை பரப்பி வருகின்றனர். என்னுடைய குடும்பத்தையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.
அந்த விவகாரத்தில் ஒரு தடகள வீரர் இன்னொரு தடகள வீரருக்கு கொடுத்த அழைப்பு மட்டுமே அது. அதைத் தாண்டி அதில் எதுவும் இல்லை. இந்தியாவில் நடக்கும் ஒரு தொடரை உலகளவில் சிறந்த தொடராக மாற்றுவதற்காகதான் பல்வேறு வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. திங்கள் கிழமை அழைப்பு விடுக்கப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்துதான் பஹல்காம் தாக்குதல் நடக்கிறது.

கடந்த இரண்டு நாட்களாக நடந்து வரும் விஷயங்களுக்குப் பிறகு அர்ஷத் நதீம் இந்தத் தொடரில் கலந்துகொள்வாரா என்கிற கேள்விக்கே இடம் இல்லை. எனக்கு தேசத்தின் நலன்தான் முதன்மையானது. பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன். பஹல்காமில் நடந்தவை ஒட்டுமொத்த தேசத்தை போலவே என்னையும் உலுக்கியது. என்னையும் ஆத்திரமடைய வைத்தது.
இந்தத் தாக்குதலுக்கு இந்தியா கொடுக்கப்போகும் பதிலடி நம்முடைய தேசத்தின் வலிமையை பறைசாற்றுவதாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். பல ஆண்டுகளாக இந்த தேசத்தை பெருமிதத்தோடு பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறேன். என்னுடைய தேசப்பற்றை கேள்வி கேட்பது வேதனையாக இருக்கிறது.

என்னையும் என் குடும்பத்தையும் காரணமே இல்லாமல் தாக்குபவர்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டியிருப்பது மனதை வலிக்க செய்கிறது. குறுகிய காலத்தில் தங்களின் கருத்துகளை மாற்றி மாற்றி பேசுபவர்களை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது. கடந்த காலங்களில் வெகுளியாக என் அம்மா பேசியவற்றை பலரும் கொண்டாடினார்கள். இப்போது அதை வைத்தே அவர் மீது வெறுப்பையும் பரப்புகிறார்கள்.' என வேதனையோடு கூறி உள்ளார். 2024 ஒலிம்பிக் போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் நதீம் தங்கம் வென்றார்.
இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார். இதுகுறித்டு நீரஜ் சோப்ராவின் தாயிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். அப்போது பேசிய நீரஜ் சோப்ராவின் தாயார், நீரஜ் சோப்ராவும் அர்ஷத் நதீமும் நண்பர்கள். நீரஜின் அம்மா அர்ஷத்தும் தன்னுடைய மகனை போன்றவர்தான் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டு இருந்தார். இதனை இப்போது பலர் விமர்சித்து வருவதை குறிப்பிட்டு நீரஜ் சோப்ரா வேதனை தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: போர் பதற்றம்.. பாகிஸ்தான் பிடியில் இந்திய வீரர்? இனி என்ன நடக்கும்?