பஹல்காம் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப்பயணிகள் 27 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், சவுதி அரேபியா மரணமடைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம்இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு சவுதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

அனைத்து வகையான வன்முறை, தீவிரவாதம் மற்றும் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை நிராகரிப்பதில் சவூதி அரேபியா தனது உறுதியான நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், இந்தியக் குடியரசின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் சவூதி அரேபியா தனது மனமார்ந்த இரங்கலையும். அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது'' எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நிலைக்குலைய வைத்த தீவிரவாத தாக்குதல்..! கரம் கொடுக்கும் சவுதி அரேபியா..!

முன்னதாக காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தனது ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக தனது இரங்கலையும் ஆதரவையும் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் சவுதி அரேபியா பயணத்தின் போது தலைவர்கள் சந்தித்தனர். "பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பிரதமரும் பட்டத்து இளவரசரும் விவாதித்தனர். பட்டத்து இளவரசர் தனது இரங்கலைத் தெரிவித்தார். மேலும் இரு தலைவர்களும் பொதுமக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தனர்" என்று சவுதி அரேபியாவிற்கான இந்தியத் தூதர் சுஹேல் அஜாஸ் கான் ஜெட்டாவில் நடந்த ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பை எடுத்துக்காட்டும் வகையில், இந்த சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக தேவையான எந்தவொரு உதவியையும் பட்டத்து இளவரசர் வழங்குவதாகவும் கூறப்படுகிறது.
முதலீடு, எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்றார். பின்னர் நிகழச்சிகளை ரத்து செய்து விட்டு அவசரமாக நாடு திரும்பினார் மோடி.
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதல் எதிரொலி..! அவசர கதியில் நாடு திரும்பும் பிரதமர் மோடி..!