காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வி, பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும், இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் மூளையாக இருந்துள்ளது என்று காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிசூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் தாக்குதல் சம்பவம் கேள்விப்பட்டு வெளிநாட்டு பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து நாடு திரும்பினர்.
இதையும் படிங்க: அசாம் பேராசிரியரின் உயிரைக் காப்பாற்றிய ‘அந்த வார்த்தை’: தீவிரவாதிகளிடம் இருந்து தப்பியது எப்படி?
பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் அவசரமாக டெல்லியில் இன்று கூடியது. அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்த ராகுல் காந்தியும் காரியக்கமிட்டிக் கூட்டத்தில் பங்கேற்றார்.
டெல்லியில் உள்ள 24 அக்பர் சாலை தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மாலையில் கூட்ட இருக்கும் நிலையில், காரியக்கமிட்டிக் கூட்டத்தில் தீவிரவாதத் தாக்குதல்தான் மையக்கருவாக இருந்தது. இந்த காரியக்கமிட்டிக் கூட்டத்தில் “தீவிரவாதிகள் அப்பாவி சுற்றுலாப்பயணிகள் மீது நடத்திய கொடூர, கோழைத்தனமான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு மூளையாக பாகிஸ்தான் இருந்துள்ளது, நம் குடியரசின் மதிப்புகள் மீது நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்களை நேரடியாகக் குறிவைத்து தாக்குதல் நாடு முழுவதும் இரு சமூகத்துக்கு இடையே கலவரத்தை மூட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பஹல்காம் தீவிரமான பாதுகாக்கப்பட்ட பகுதி, 3 அடுக்கு பாதுகாப்பு எப்போதும் இருக்கும்.

அப்படியிருக்கும்போது, இந்தப் பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு ஒட்டுமொத்த உளவுத்துறை தோல்வி மற்றும் பாதுகாப்பு குறபைாடுகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். இந்த உளவுத்துறை, யூனியன் பிரதேசபாதுகாப்பு ஆகியவை நேரடியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்டுப்பாட்டில் வரும். இந்த கேள்விகள் அரசியல் நோக்கோடு அல்லாமல் பொதுநலத்துடன் கேட்கிறோம். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் தங்களின் உறவுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு நீதி கிடைக்க இதுதான் சரியான வழி.

பஹல்காம் பகுதியில் சுற்றுலாப்பயணிகளின் உயிரைப் பாதுகாக்க உள்ளூர் சுற்றுலா வழிகாட்டிகள், உயிர்தியாகம் செய்த குதிரை ஓட்டுபவர் ஆகியோருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்படும். அமர்நாத் புனித யாத்திரை விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், தேசத்தின் முன்னுரிமை கருதி, பக்தர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வலுவான, வெளிப்படையான மற்றும் முன்னெச்சரிக்கையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தாமதமின்றி தொடங்க வேண்டும். யாத்ரீகர்களின் பாதுகாப்பும், சுற்றுலாவை நம்பியுள்ள ஜம்மு காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரமும் முழு தீவிரத்துடனும் தீர்க்கத்துடனும் பாதுகாக்கப்பட வேண்டும்.
ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு மிகவும் தேவைப்படும் நேரத்தில் கருத்து வேறுபாடு, அவநம்பிக்கை, பிரிவினை மற்றும் பிரிவினையை விதைக்க போலி முகவரி மூலம் சமூக ஊடகத்தில் பிரசாரம் செய்வது, கருத்துக்கள் தெரிவிப்பது தடுக்ககப்பட வேண்டும்.
இவ்வாறு காங்கிரஸ் கட்சி தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘தீவிரவாதத்துக்கு மதம் இருக்கிறது, ஜிஹாத்துக்கு நாம் தொடர்ந்து நிதியளிக்கிறோம்’: பாஜக எம்எல்ஏ காட்டம்..!