காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இந்த மோசமான சம்பவத்தில் 3 முதல் 5 தீவிரவாதிகள் ஈடுபட்டு இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அங்குத் துப்பாக்கிச் சூட்டை பார்த்தவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையின் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் போட்டோ மற்றும் வரைபடம் வெளியிடப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு முகமைகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளில் இருவரைத் தான் நேரில் கண்டதாக உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்த ஏக்தா திவாரி என்ற பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து ஏக்தா திவாரி கூறுகையில், எங்கள் குழுவில் 20 பேர் இருந்தோம். ஏப்ரல் 13 அன்று ஜம்மு காஷ்மீரில் பல்வேறு இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்தோம்.
இதையும் படிங்க: அடிச்சி நொறுக்குங்க.. சொன்ன மாதிரியே செய்த மோடி.. தவிடுபொடியாகும் பாகிஸ்தான்..!

ஏப்ரல் 20 அன்று பஹல்காம் சென்றோம். அன்று எங்கள் குழுவினருக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டது. அதனால், தாக்குதல் நடந்த பைசரன் பகுதிக்கு சுமார் 500 மீட்டர் முன்பாகவே அனைவரும் இறங்கினோம். சுற்றிலும் இருந்த சிலரின் நோக்கம் சரியாகத் தோன்றவில்லை. அவர்கள் எங்களிடம் குரான் படிக்கச் சொன்னார்கள்.
நாங்கள் கோவேறு கழுதைகளில் ஏறிக்கொண்டிருந்தபோது, இரண்டு பேர் எங்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் என்னைப் பற்றியும், எங்கள் குழுவில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்றும் விசாரித்தனர். நாங்கள் என்ன மதம், இந்துவா முஸ்லிமா என்றும் கேட்டனர். மேலும், குரான் படிக்கச் சொன்னார்கள். ஏன் ருத்ராட்சம் அணிந்திருக்கிறீர்கள் என்றும் கேட்டனர்.

என் சகோதரர் ருத்ராட்சம் அணிய பிடிக்கும் என்று சொன்னபோது, அவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நாங்கள் அங்கிருந்து இறங்கி, மற்ற கோவேறு கழுதை ஓட்டுபவர்களின் உதவியுடன் திரும்பிவிட்டோம். சிறிது நேரத்திலேயே, அவர்களில் ஒருவருக்கு ஒரு அழைப்பு வந்தது. சிறிது தூரம் சென்ற பிறகு, அவர் தொலைபேசியில் ரகசிய குறியீட்டு வார்த்தைகளில் "பிளான்-ஏ தோல்வியடைந்துவிட்டது என்று கூறினார்.
35 துப்பாக்கிகளை அனுப்புவது குறித்தும் அவர்கள் பேசினர். இந்த விஷயங்கள் என் சந்தேகத்தை ஆழப்படுத்தின. 35 துப்பாக்கிகள் பற்றி பேசிய பையனின் புகைப்படம் என்னிடம் உள்ளது. பயங்கரவாதிகளின் ஓவியங்கள் வெளியான பிறகு, நான் அவரை அடையாளம் கண்டுகொண்டேன்" என்று ஏக்தா திவாரி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்... அப்பாவி மக்கள் உயிர்ழப்பு; உலக முஸ்லிம் லீக் கண்டனம்!!